மன்னார் மாவட்டத்தில் உள்ள கரையோர பிரதேசங்களில் உள்ள அபாயம் கூடிய கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு முன்னுரிமை வழங்கப்பட்டுக் குறித்த கிராமங்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
நேற்றையதினம் ‘பைசர்’ கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக தலைமன்னாரில் 5 கிராம அலுவலகர் பிரிவுகளில் வாழும் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பியர் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் தலைமன்னார் புனித லோறன்சியா ஆலய வளாகம் போன்ற இடங்களில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்திற்கு என 20 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள், தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி, மன்னார் பிரதேசச் செயலாளர் உட்பட சுகாதாரத் துறையினர் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றையதினம் பேசாலை, வங்காலை, முத்தரிப்புத்துறை, மடு ஆகிய பகுதிகளில் குறித்த தடுப்பூசிகள் செலுத்தும் பணி இடம்பெற்று வருகின்றன.