கொழும்பு – டாம் வீதி, ஐந்துலாம்பு சந்தி பகுதியில் பயணப் பையில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குருவிட்டை பகுதியைச் சேர்ந்த 30 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த பெண்ணுடையது என சந்தேகிக்கப்படும் புகைப்படத்தையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, சந்தேகநபர் பதுல்கும்புரவில் அமைந்துள்ள அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
அவரின் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்திற்கு அருகில் இருந்து விஷ போத்தல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துக் கொண்டிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
52 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் புத்தல காவல் நிலையத்தில் கடமையாற்றும் விடுமுறையில் சென்றுள்ள உப காவல்துறைப் பரிசோதகர் என தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும், அவரை பயண பொதியில் கொண்டு வந்து டேம் வீதியில் விட்டு செல்லும் நபரும், கடந்த 28 ஆம் திகதி ஹங்வெல்லை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள விடுதி ஒன்றிற்கு செல்லும் காட்சி சீ.சி.ரி.வியில் பதியுள்ளது.
மறுநாள் அந்த விடுதியில் இருந்து பயண பொதியொன்றுடன் சந்தேகநபர் மாத்திரம் வெளியேறும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து சந்தேகநபர் ஹங்வெல்லையில் இருந்து புறக்கோட்டைக்கு பயணிக்கும் பேருந்து ஒன்றில் ஏறும் சிசிடிடி காட்சியும் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்றார்.