உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்துக்கொள்வது உடல் நலத்துக்கு தீங்கானது என்று ஒவ்வொருவருக்கும் தெரியும். உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் வரும் வரை யாரும் உணவில் உப்பைக் குறைக்கத் தயாராக இருப்பது இல்லை. உப்பு நம்முடைய உடல் ஆரோக்கியமாக இயங்க தேவையான ஒன்றுதான். ஆனால் எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொருத்து அது அமுதாகவோ விஷமாகவே மாறுகிறது.
உப்பு என்பது சோடியம் குளோரைடு என்ற ரசாயனக் கலவை ஆகும். சோடியம் நம்முடைய நரம்பு மண்டலம் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக செயல்பட, உடலின் நீர் அளவை பராமரிக்க அவசியம். செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சரியான அளவு நீர்ச்சத்து இருக்க குளோரைடு அவசியம். இந்த இரண்டும் இணைந்து ரத்த அழுத்தம் சீராக இருக்க துணை செய்கின்றன. அளவுக்கு மிஞ்சும் போது அது பல்வேறு உடல் நலக் குறைபாட்டை ஏற்படுத்திவிடுகிறது.
அதிக அளவில் உப்பு எடுக்கும்போது அது நோய் எதிர்ப்பு செல்களின் கிருமிகளை எதிர்த்து செயல்படும் தன்மையை பாதிப்படைய செய்வதாக ஜெர்மனியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அதிக அளவில் உப்பு எடுப்பது நோய் எதிர்ப்பு செல்களின் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளை அழிக்கும் திறனை மழுங்கடிக்கச் செய்துவிடுகிறதாம்.
எலிகளுக்கு அதிக உப்பு உள்ள உணவு கொடுத்து பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றின் மீது பாக்டீரியா கிருமியை செலுத்திய போது உப்பு அதிக அளவில் எடுத்துக்கொண்ட எலிகளுக்கு பாக்டீரியாவின் பெருக்கம் மிகப்பெரிய அளவில் இருந்ததை கண்டறிந்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை படி ஒரு நபர் ஒரு நாளைக்கு ஐந்து கிராம் அளவுக்குத்தான் உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு இதைவிடக் குறைவான அளவிலேயே உப்பு சேர்க்க வேண்டும்.