வாஷிங்டன் : பாகிஸ்தானுக்கான ராணுவ நிதியுதவி நிறுத்தத்தை தொடர, அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் தங்களுக்கு பக்கபலமாக உள்ள நாடுகளுக்கு, அமெரிக்கா ராணுவ நிதியுதவி அளித்து வருகிறது. பாகிஸ்தானும் இந்த நிதியுதவியை நீண்ட நாட்களாக பெற்று வந்தது. ஆனால், ‘பயங்கரவாதிகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையை பாகிஸ்தான் அரசு எடுப்பதில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக பாகிஸ்தான் உள்ளது’ என, புகார் எழுந்தது.
இது, அமெரிக்காவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, 2018ல், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ராணுவ நிதியுதவியை, அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் நிறுத்தினார். அடுத்த இரண்டு ஆண்டுகளும் நிதியுதவி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு துவக்கத்தில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். இதனால், ‘ராணுவ நிதியுதவியை அமெரிக்கா மீண்டும் அளிக்கும்’ என, பாகிஸ்தான் எதிர்பார்த்தது. ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவ நிதியுதவி நிறுத்தத்தை தொடர, அதிபர் பைடன் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்க ராணுவ தலைமையகமான, ‘பென்டகனின்’ செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது: பயங்கரவாதத்துக்கு எதிரான செயல்பாடுகளில் பாகிஸ்தானிடம் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. அதனால் ராணுவ நிதியுதவி நிறுத்தத்தை இந்த ஆண்டும் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement