புதுடில்லி : ”பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத குழுக்களை ஒழிக்க செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்,” என, நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் காரசாரமாக பேசினார்.
எஸ்.சிஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சேர்ந்த உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூட்டம், மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பே நகரில் நேற்று நடந்தது. இதில் நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாக்., தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், ஆப்கன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹம்துல்லா மொஹிப் உட்பட, அனைத்து உறுப்பு நாடுகளின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அஜித் தோவல் பேசியதாவது: பயங்கரவாதம் எந்த வகையில் வெளிப்பட்டாலும் அதை ஒடுக்க வேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம். எல்லை தாண்டிய பயங்கரவாத சதி செயல்களில் ஈடுபடுபவர்களை நீதியின் முன் நிறுத்தியாக வேண்டும். ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக ஆயுதங்கள் கடத்துவது, சமூக வலைதளம், ‘டார்க் வெப்’ போன்றவற்றை தங்கள் சதித்திட்டங்களுக்காக தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயங்கரவாத குழுக்கள் பின்பற்ற துவங்கியுள்ளன. இதை கண்காணித்து முறியடிக்க வேண்டும்.
ஐ.நா.,வால் தடை விதிக்கப்பட்ட பயங்கரவாதிகள் மற்றும் குழுக்கள் மீது பொருளாதார தடைகள், தீர்மானங்கள் முழுதுமாக நடைமுறைபடுத்தப்பட வேண்டும். பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுவதை தடுக்க, நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும். லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத குழுக்களை ஒழிக்க, செயல்திட்டங்கள்வகுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement