ISS இல் தொடர்ந்து ஏற்படும் பல விதமான கோளாறுகள்
சர்வதேச விண்வெளி நிலையமான ISS இல் தொடர்ந்து பல விதமான கோளாறுகள் ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், இவை பெரும்பாலும் காலாவதியான உபகரணங்கள் மற்றும் வன்பொருள் காரணமாக எழுந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) நீண்ட காலமாகத் தொடர்ந்து சில கோளாறுகளைச் சந்தித்து வருகிறது. இது இன்னும் சில காலத்தில் “சரிசெய்ய முடியாத” அளவிற்குத் தோல்விகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஷ்ய அதிகாரி எச்சரித்துள்ளார்.
80 சதவிகித அமைப்புகள் காலாவதி தேதியைக் கடந்துவிட்டதா?
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள ரஷ்ய பிரிவு விமானத்தில் உள்ள 80 சதவிகித அமைப்புகள் காலாவதி தேதியைக் கடந்துவிட்டதாக விளாடிமிர் சோலோவியோவ் மாநில ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இதை விட, விண்வெளி நிலையத்திற்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறிய விரிசல்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் இந்த சிறிய விரிசல்கள் மோசமடையக்கூடிய பெரிய விரிசல்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யா நீண்ட காலமாகக் கவலை எழுப்பிய காரணம் என்ன தெரியுமா?
சர்வதேச விண்வெளி நிலையத்தின் வன்பொருள் மீது ரஷ்யா நீண்ட காலமாகக் கவலை எழுப்பி வருகிறது. அதேபோல், வரும் 2025 ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து நாம் வெளியேறலாம் என்று ரஷ்யா பரிந்துரைத்துள்ளது. இந்த சர்வதேச விண்வெளி நிலையம் 1998 இல் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளின் கூட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டது. இந்த நிலையம் முதலில் வெறும் 15 வருட ஆயுட்காலத்திற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ISS சரிசெய்ய முடியாத தோல்விகளைச் சந்திக்குமா?
ISS இன் ரஷ்யப் பிரிவின் முன்னணி டெவலப்பரான விண்வெளி நிறுவனமான எனர்ஜியாவின் தலைமை பொறியாளர் சோலோவியோவ் கூறுகையில், “விமானத்தில் உள்ள அமைப்புகள் முழுமையாக அதற்காக வழங்கப்படக் காலாவதி நாட்களைத் தாண்டி சென்றுவிட்டது, இது கூடிய விரைவில் சரிசெய்ய முடியாத தோல்விகளைச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உருவாக்கத் தொடங்கலாம்.” என்று அவர் கூறியுள்ளார்.
ISS சரக்கு தொகுதியில் “மேலோட்டமான” விரிசல்கள் காணப்பட்டதா?
ஸ்டேஷனில் உள்ள பெரும்பாலான உபகரணங்களுக்கு வயதாகிவிட்டதாகவும், விரைவில் இவை புதிய கருவிகளுடன் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கடந்த ஆண்டே எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னாள் விண்வெளி வீரர் ரஷ்யாவின் ஜர்யா சரக்கு தொகுதியில் “மேலோட்டமான” விரிசல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார். 1998 இல் தொடங்கப்பட்ட இது ISS இன் பழமையான தொகுதிகளில் ஒன்றாகும், இப்போது இது முதன்மையாக சேமிப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது.
பரவத் தொடங்கும் விரிசல்கள் ஆபத்தின் அறிகுறியா?
இது மிகவும் மோசமானது மற்றும் இந்த விரிசல் காலப்போக்கில் பரவத் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், ரஷ்யாவின் துணைப் பிரதமர் யூரி பாரிசோவ் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வயதான உலோகம் எல்லாம் விரைவில் மீள முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறியுள்ளார். இந்த பேரழிவிற்கு நாம் ஒரு காரணமாக இருந்துவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ISS இன் ஆயுள் வரும் 2030 வரை மட்டும் தானா?
ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் சென்ற ஆண்டு கணித்துக் கூறிய தகவலின் படி, விண்வெளியில் மிதக்கும் நமது சர்வதேச விண்வெளி நிலையமானது மேற்கூறிய கரணங்கள் மற்றும் கட்டமைப்பு சோர்வு காரணத்தினால் 2030 ஆம் ஆண்டிற்கு அப்பால் முழுமையாகச் செயல்பட இயலாத நிலைக்குச் சென்றுவிடும் என்று அவர் கூறியுள்ளார். இதனால், வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் ISS இல் இருக்கும் கோளாறுகள் ஒவ்வொன்றாக விரைந்து சரி செய்தாக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட்டின் உந்துவிசை எச்சரிக்கை இல்லாமல் இயங்கியதும் கோளாறு காரணமாக தானா?
சமீபத்திய ஆண்டுகளில் ஏற்பட்ட பட்ஜெட் குளறுபடி மற்றும் ஊழல் காரணமாக ரஷ்யாவின் விண்வெளித் திட்டம் பாதிக்கப்பட்டது. இதனால், ரஷ்யாவின் ஐஎஸ்எஸ் பிரிவும் பல சிக்கல்களை எதிர்கொண்டது. ஜூலை மாதம், நாட்டின் நாவுக்கா ஆராய்ச்சி மாதிரி மீது ஒரு செயலிழப்பை எழுப்பியது. இது ஜெட்டின் உந்துவிசையை எச்சரிக்கை இல்லாமல் பயன்படுத்தியது. இதன் காரணமாக, ஐஎஸ்எஸ் ஸ்திரமின்மையைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு தரமான போனுக்காக தான் காத்திட்டு இருந்தோம்.. வந்தாச்சு ரியல்மி 8i ஸ்மார்ட்போன்.!
ரஷ்யாவின் அடுத்த நடவடிக்கைகள் என்ன?
ஐஎஸ்எஸ் குழு உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளை வழங்கும் அதன் ஸ்வெஸ்டா சேவை தொகுதியில் 2019 ஆம் ஆண்டு முதல் பல இடங்களில் காற்று கசிவுகளை அனுபவித்ததாக வீரர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னடைவுகள் இருந்தபோதிலும், நாட்டின் விண்வெளி நிறுவனம் வீனஸுக்கு ஒரு பயணத்தை மேற்கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல், அடுத்த ஆண்டு விண்வெளியில் சுற்றுப்பயணம் செய்யும் திறன் கொண்ட ஒரு ராக்கெட்டை உருவாக்கவும் திட்டம் வைத்துள்ளது.